அம்முறை மாறிப் பல அடுக்கி ஒரு சொற்கொண்டு முடிதல் வழு எனினும் முடிக்குஞ் சொல் ஒன்றனான் முடிதலின் வழு அமைதி ஆதல் அறிக- உருபும் முற்றும் பெயரெச்சமும் ஒரு முறையான்அடுக்கி வரும் என்பதும், வினையெச்சமாயின் பலவாய்பாட்டானும் அடுக்கிவரும் என்பதும் கொள்ளப்படும். என்னொடும் நின்னொடும் என மூன்றன் உருபு ஏற்ற சொற்கள் அடுக்கிச் ‘சூழாது’ என்ற வினைகொண்டன. அந்தணர் நூற்கும் அறத்திற்கும் என நான்கன் உருபு ஏற்ற சொற்கள் அடுக்கி ‘ஆதியாய்’ என்ற வினைகொண்டன. உண்டான் தின்றான் ஓடினான் பாடினான் எனத் தெரிநிலை வினைமுற்றுக்கள் ஒருவாய்பாட்டான் அடுக்கிச் ‘சாத்தன்’ என்ற பெயர் கொண்டன. நல்லறிவுடையன் செவ்வியன் எனக் குறிப்பு வினைமுற்றுக்கள் ஒரு வாய்பாட்டான் அடுக்கிச் ‘சான்றோன்மகன்’ என்ற பெயர் கொண்டன. ‘பாயுந்து தூங்குந்து தரூஉந்து பாயும் கெழீஇய மிழலை’ என்ற தொடரில் உந்து ஈற்றுப் பெயரெச்சங்கள் செய்யும் என்ற வாய்பாடு ஈறு திரிந்து ஆயின ஆதலின் அவையும் பாயும் என்பது போலச் செய்யும் என்னும் பெயரெச்சங்களால் ஒருமுறையான் அடுக்கி, இடையே கெழீஇய’ என்ற செய்த என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சத்தை இடைப்பிற வரலாகக்கொண்டு, மிழலை என்ற பெயர் கொண்டு முடிந்தன. உண்டு தின்று ஓடிப் பாடி வந்தான் எனச் செய்து என்னும் ஒரே வாய்பாட்டு வினையெச்சம் பலவாக அடுக்கி ‘வந்தான்’ என்ற வினைகொண்டு முடிந்தது. |