சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

624 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

கொத்து நூலார் “வல்லம் எறிந்த மல்லல் யானைப் பெருவழுதி என்றலே முறை.
இதனிடையே நல்லிளங்கோசர் தந்தை எனவருதல் இடைப்பிறவரல் என்க. இச் செய்யுள்
போலப் பெரும்பாலும் உள என்க” என்று கூறியதனை உட்கொள்ள, செய்யுட்கண்
பொருத்தமில் புணர்ச்சியாய் வரும் இடைப்பிறவரல்களைத் தள்ளாது பொருள் இயைபு
நோக்கிக் கொள்ளல் வேண்டும் என்பதும் உணரப்படுகிறது.
 
‘மருவின் தொகுதி மயங்கியல் மொழியும்
உரியவை உளவே புணர்நிலைச் சுட்டே’
 
தொல்.111
 
என்ற நூற்பாவுரையுள் நச்சினார்க்கினியர் ‘மருவின் தொகுதி மயங்கியல் மொழியும்’
என்ற தொடரை, மருமொழியும் இன் தொகுதி மயங்கியல் மொழியும் என்று பிரித்துக்
கொண்டு, ‘செய்யுட்கண் நிறுத்த சொல்லும் குறித்துவரும் கிளவியும் போன்று ஒட்டிநின்று
தம்முள் இயையாது பின்னர்ச் சென்று இயையும் சொற்களும்’ என்று பொருள் கூறிக்
‘கருங்கால் ஓமைக் காண்பின் பெருஞ்சினை’ (அகம்.3) முதலியவற்றை எடுத்துக்காட்டுவர்.
அவர் குறிப்பிடும் ‘காண்பின்’ போல்வன இடைப்பிறவரலாதல் தேற்றம்.
 

ஒத்த நூற்பாக்கள்
 

  ‘தத்தம் எச்சமொடு சிவணும் குறிப்பின்
எச்சொல் லாயினும் இடைநிலை வரையார்.’
 
தொல்.சொல்.237
 
  ‘சிலசொல் இடைவந்து கூடியுடன்
நின்றாதல் மெய்ந்நூல் நெறி.’
 
நே.சொல்.46
 
  முழுதும் நன்.356
  ‘தத்தம் குறைவாம் இருவகைப் பெயருடன்
இயையும் குறிப்புடை எச்சொல் ஆயினும்.
இடைநிலை வரையார் என்மனார் புலவர்.’
மு.வீ.வி.36