இது வழுவற்க எனக்காத்தலும், வழுவி அமைக்க என அமைத்தலும் ஆகிய முறைமை பற்றி நிகழ்வதோர் ஒழிபு கூறுகின்றது; என்னை? ஒன்றனது அவாய்நிலையை முடித்தற்கு வரும் சொல் பின் வருதல் மரபு ஆகலின் வழுவற்க எனவும், முன்வருதல் மரபு அன்மையின் வழு ஆயினும் முடித்தற்கு உரியன வரின் அமைவுடைய எனவும் கூறுதலின். இ-ள்: உருபு ஏற்ற சொற்கும் முற்றுச்சொற்கும் பெயரெச்சச்சொற்கும் எச்சமாய் அவற்றின் அவாய்நிலையை முடித்தற்கு வரும் பெயரும் வினையும் இறுதிக்கண் வரும்; அவற்றது அவாய்நிலையை முடித்தற்கு உரியன முதற்கண் வருதலும் வழுவாகாது இலக்கணமாம் என்றவாறு. எ-டு: சாத்தன் வந்தான்- நிலத்தைக் கடந்தான்- சாத்தனொடு வந்தான்- சாத்தற்குக் கொடுத்தான்- சாத்தனின் வலியன்- சாத்தனது ஆடை- குன்றத்துக்கண் இருந்தான்- சாத்தா! வா- எனவும், |