சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-36627

வேற்றுமை உருபு ஏற்ற சொல்லை முடிக்க வரும் பெயர்ச்சொல்லும் முதற்கண் வரின்
பொருள் கவர்க்கும் ஆதலின் அவை கொள்ளப்படா. சாத்தனது ஆடை என்பது ஆடை
சாத்தனது என்று வரின் சாத்தனது என்பது ஆறாம் வேற்றுமை உடைமைப்பொருட்கண்
வந்த குறிப்பு வினை முற்றாய் ஆடை என்ற எழுவாய்க்குப் பயனிலையாகும் என்பதும்,
குன்றத்துக்கண் கூகை என்பது கூகை குன்றத்துக்கண் என வரின் கூகை என்னும்
எழுவாய் தன் பயனிலையை அவாவி நிற்கும் நிலைக்கண்ணதாய்ப் பொருள் கவர்க்கும்
என்பதும் காண்க. ஆறாம்வேற்றுமை ஏற்றுநின்ற சொல் பெயராயும் வினைக்குறிப்பாயும்
நிற்கும் என்றார் சேனாவரையரும்(தொல்.சொல்.2)
 

“ஆறன் உருபின் எச்சமும் ஏழன்உருபின் எச்சப்பெயரும் பெயரெச்சத்தின்
எச்சமும் முதற்கண் வாரா என்பதும், ஏனையவரினும் இறுதிக்கண் வருவன போலச்
சிறப்பின அல்ல என்பதும் கொள்க. எழுவாய் உருபு வினைமுற்றுப் பயனிலையை
இறுதிக்கண் கொண்டதும் வினைமுற்று பெயர்ப்பயனிலையை முதற்கண் கொண்டதும்
சாத்தன் வந்தான் எனவரும். தம்முள் வேற்றுமை யாதோ எனின், கேட்போர்க்குச்
சாத்தன் இது செய்தான் என வினையை உணர்த்துவதும், இது செய்தான் சாத்தன் என
வினைமுதலை உணர்த்துவதும் ஆம் என்க.”- நன்.357- விருத்தியுரை.
 

“பெயரெச்சத்தின் முதற்கண் பெயர் வாராது; என்னையெனின், அது ‘சாத்தன்
உண்ட’ என அஃறிணை வாய்பாடாக முடியும் ஆகலான் என்பது.” நன்.356 மயிலை.
 

‘சாத்தன் உண்ட’ என்ற தொடர் சாத்தனால் உண்ணப்பட்டன என்று கவர்பொருள்
படுதலின், இவ்வாசிரியரும் பெயரெச்சத்தின் முடிக்குஞ் சொல், முன்னர் வருதலை
நீக்கினார்.