எனவே, ஏனைய இறுதிக்கண் தொகாது இடைக்கண் தொகும் என்பதூஉம், ஐயும் கண்ணும் ஈரிடத்தும் தொகும் என்பதூஉம் பெற்றாம். இடைக்கண் தொகும் இயல்பு மேற்கூறுப. அற்றேல், இவற்றினையும் அவற்றைச் சாரக் கூறாது ஈண்டுக் கூறியது என்னை எனின், கடந்தான் நிலம்- இருந்தான் குன்றத்து- என்பன ஒருங்கு இசைத்து உருபு ஏற்றலும் பயனிலை கோடலும் எய்துமாறு இலவாய்ப் பக்கிசைத் தலின், அவற்றின் வேறு என்பது உணர்த்துதற்கு ஈண்டுக் கூறினார் என்க. தாய் மூவர்- அறங்கறக்கும்- வரைபாய்தல்- சாத்தன் புத்தகம்- என இடைக்கண் தொக்குநின்ற மூன்றாவது முதலிய நான்கும் முறையே மூவர் தாய்- கறக்கும் அறம்- பாய்தல்வரை- புத்தகஞ்சாத்தன்- என இறுதிக்கண் தொகாமையும், கடந்தான் நிலம்- இருந்தான் குன்றத்து- என முறையே ஐயும் கண்ணும் இறுதிக்கண் தொக்கமையும் காண்க. பிறவும் அன்ன.37 |