சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

634 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

இனி, இடமும் காலமும் பற்றிப் பால் விளக்கும் வழியும் அறிந்து கொள்க.

‘சிறப்புப் பெயர்வினை’ என்றாரேனும் சிறுபான்மை நிகழ்காலம் உணர்த்தும்
செய்யும் என்னும் பலர் வரை கிளவி ஆகிய பொதுவினையும் சாத்தன் யாழ் எழூஉம்-
சாத்தி சாந்து அரைக்கும்- என முறையே உயர்திணை ஒருவற்கும் ஒருத்திக்கும்
ஏற்பித்தலும் கொள்க.

  இனி, யான்பாணன்- யான் கடுவன்- நீ நம்பி- நீ சேவல்- எனப் பாணன் கடுவன்
முதலாயின யான் நீ முதலியவற்றின் பொதுமை நீக்கி நின்றன என்பாரும் உளராலோ
எனின், அவை தத்தம் மரபின் மேல்வரும் சிறப்புப் பெயர் அல்ல ஆகலான்
இடவழுவாம் என்பதற்கு அவர் இடவழுவிற்குக் காட்டிய அவன்யான்- சாத்தன் யான்
முதலிய உதாரணங்களே கரி ஆகலின் பொருந்தாது என மறுக்க. 39
 

விளக்கம்


தனிப்பட்ட முறையில் திணை துணியப்படாத சொற்கள் தம்மை முடித்தற்கு வரும்
சிறப்புச் சொற்களால் திணை துணியப்படும்.

அங்ஙனமே பொதுவாகக் கூறின் பால் துணியப்படாப் பொதுச்சொற்கள், தம்மை
முடித்தற்கு வரும் சிறப்புச் சொற்களான் பால் உணரப்படும் என்பது.

சாத்தன் என்பது இருதிணைக்கும் பொதுப்பெயர். அது தன்னை முடித்தற்கு வரும்
ஒருவன், வந்தான்- என்ற சிறப்புப் பெயர் வினைகளால் தான் உயர்திணை ஆகியவற்றை
அறிவிக்கின்றது.

ஆ-என்பது அஃறிணை இருபாற்கும் பொதுவான சொல், அஃது ஒன்று, வந்தது
என்ற சிறப்புப் பெயர் வினைகளால் தான் ஒருமை ஆகியவாற்றை அறிவிக்கிறது.