இதுமேல் பொது வகையான் கூறப்பட்ட தொகைநிலைத் தொடர்மொழி இயல்பு தொகுத்துக் கூறுவதாயதோர் ஒழிபு கூறுகின்றது. இ-ள்: பெயர்ச்சொல்லுடனே பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் வேற்றுமைப் பொருள் முதலிய பொருள் மேல் தம்முள் புணரும் இடத்து, வேற்றுமை உருபும் உவம உருபும் உம்மும் ஆகிய இடைச்சொற்கள் தம்மிடையே புலப்படாது தொக்குநிற்பத் தாம் ஒன்றனோடு ஒன்று சென்று இயைந்தும், அவ்வாறு தொக்கு நிற்பது பிறிது ஒன்று இன்றித் தாமே ஒன்றனோடு ஒன்று சென்று இயைந்தும், இரண்டும் பலவுமாகப் பிளவுபடாது ஒருசொல் நீர்மைப்பட்டு, ஒருசொல் நின்று தன்னை முடிக்கும் சொற்களோடு முடியுமாறு போலத் தாமும் தம்மை முடிக்கும் சொற்களோடு முடியும் தொடர்மொழிகள் மேற்கூறிய தொகைநிலைத்தொடர் மொழிகளாம் என்றவாறு. எனவே, இரண்டும் பலவும் ஆகிய சொற்கள் உருபும் உம்மும் தம்மிடையே தொக்கு நிற்பத் தம்மில் தாம் தொக்கு ஒருசொல் நடையவாய் முடிவனவும், இடையே தொக்கு நிற்பன பிறிது ஒன்று இன்றித் தம்மில் தாமே தொக்கு ஒரு சொல் நடையவாய் முடிவனவும் எனத் தொகைநிலைத் தொடர்ச்சொல் இருவகைப்படூஉம் என்பதூஉம் ஆயிற்று. வேற்றுமைஉருபு ஐஒடு முதலியவாக முன்னர்க் கூறப்பட்டனவாம். உவமஉருபு அன்ன- ஏய்ப்ப- முதலியவாகப் பின்னர் அணியியலுள் கூறப்படுவனவாம். எ-டு: யானைக்கோடு என்பது பெயரொடு பெயர் தொக்க இருமொழித்தொடர். நிலங்கடந்தான் என்பது பெயரொடு வினைதொக்க இருமொழித்தொடர். இவை ஒருசொல் நடையவாய் யானைக்கோடு கூரிது எனப் பயனிலை கொண்டும், யானைக் கோட்டைக்குறைத்தான் என உருபு ஏற்றும், நிலங்கடந்தான் எனப் பயனிலை கொண்டும் முடிந்தவாறு காண்க. |