சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-40639

உரிச்சொற் கிளவி- கற்சுனைக்குவளை இதழ்- துடியிடை நெடுங்கண் துணைமுலைப்
பொற்றொடி- என்பன பன்மொழித் தொடர். இவை ஒரு சொல் நடையவாய்,
‘உரிச்சொற்கிளவி விரிக்குங்காலை’ எனவும், கற்சுனைக் குவளைஇதழ் நறிது எனவும்,
துடியிடை நெடுங்கண் துணைமுலைப் பொற்றொடி வந்தாள் எனவும் மேல்வந்து
முடிப்பனவற்றொடு முடிந்தவாறு காண்க.

இனி, உரையிற் கோடலான் தொகை அல்லாத தொடர்மொழி எனினும் ஒருசொல்
நடையவாய் முடிவன எனக் கொள்க. அவை யானை கோடுகூரிது- இரும்பு பொன்
ஆயிற்று- மன்றுபாடவிந்தது- மக்களை உயர் திணைஎன்ப- எனவரும். பிறவும் அன்ன.

வேற்றுமை உருபும் உவம உருபும் உம்மையும் வினைச் சொல் ஈறும் பண்புச்
சொல் ஈறும் தொகுதலின் தொகை ஆயின என்பாரும். அவ்வப் பொருள் மேல்
இரண்டும் பலவும் ஆகிய சொல் பிளவுபடாது ஒற்றுமைப்படத் தம்முள் இயைதலின்
தொகை ஆயின என்பாரும் என இரு திறத்தார் ஆசிரியர். செய்தான் பொருள்-
இருந்தான் மாடத்து- என உருபு தொக்கு ஒருசொல் நீர்மைப்படாதனவும் தொகை
ஆவான் சேறலின் அவற்றை நீக்குதற்கும், வேழக்கரும்பு- கேழற்பன்றி- என்புழித்
தொக்கன இல்லை எனினும் தொகை என வேண்டப்படும் ஆதலான் அவற்றைத்
தழுவுதற்கும் உருபு முதலாயின தொகுதல் தொகை என்பார்க்கும் ஒட்டி ஒரு சொல்
நீர்மைப்படுதலும் தொகை இலக்கணம் எனல் வேண்டும்; அதனான் உருபு முதலாயின
தொகுதல் எல்லாத் தொகையினும் செல்லாமையான், எல்லாத் தொகைக்கண்ணும்
செல்லும் ஒட்டி ஒரு சொல்லாதலே தொகை இலக்கணமாய் முடிதலின் அதனையே
தொகை இலக்கணமாகக் கூறினார். ஆசிரியர் தொல்காப்பியனாருக்கும் இதுவே துணிவு
என்பது சேனாவரையர் உரையான் உணர்க. 40