இது முறையானே வேற்றுமைத்தொகை ஆமாறு கூறுகின்றது. இ-ள்: இது முற்கூறிய தொகை ஆறனுள் வேற்றுமை உருபுகள் தொக அவற்றின் பொருள் தொக்க தொகைச் சொற்கள் அவ்வுருபுகள் தொக்கனவேனும் தொகாது நின்று அவ்வேற்றுமை உருபுதொடர் பொருள் உணர்த்தியாங்கு உணர்த்தும் இயல்பினை உடையனவாம் என்றவாறு. எனவே சாத்தனொடு வந்தான் என்னும் பொருட்கண் சாத்தன் வந்தான் எனவும், சாத்தற்குக் கொடுத்தான் என்றும் பொருட்கண் சாத்தன் கொடுத்தான் எனவும் உருபு தொடர்ப்பொருள் உணர்த்தும் ஆற்றல் இல்லன தொகா; அவ்வாற்றல் உடையனவே தொகுவன என்றவாறு ஆயிற்று. இரண்டாம் வேற்றுமைத்தொகை முதலாக வேற்றுமைத்தொகை அறுவகைப்படும். |