வரலாறு: நிலங்கடந்தான், குழைக்காது- தாய் மூவர், பொற்குடம்- கருப்பு வேலி, கடிசூத்திரப்பொன்- வரைபாய்தல், கருவூர்க்கிழக்கு- சாத்தன் புத்தகம், கொற்றன் உணர்வு- மன்றப்பெண்ணை, மாரிமா- எனவரும். இவை முறையானே நிலத்தைக் கடந்தான், குழையை உடைய காது- தாயொடு மூவர், பொன்னான் இயன்ற குடம்- கரும்பிற்கு வேலி, கடிசூத்திரத்திற்குப்பொன்- வரையின் நின்று பாய்தல். கருவூரின் கிழக்கு- சாத்தனது புத்தகம், கொற்றனது உணர்வு- மன்றத்துக்கண் நிற்கும் பெண்ணை, மாரிக்கண் உளதாம் மா- என்னும் உருபு தொடர்ப்பொருளை இனிது விளக்கியவாறு காண்க. பிறவும் அன்ன. இனி, இவ்வாறன்றி ‘இரண்டு முதலா இடைஆறு உருபும் வெளிப்படல் இல்லது வேற்றுமைத் தொகையே’
எனச் சூத்திரம் செய்யின், உருபுதொடர்ப்பொருள் உணர்த்தும் ஆற்றல் இல்லன தொகா; அவ்வாற்றல் உடையனவே தொகும் என்னும் விசேட விதி அதனால் பெறப்படாமையானும் அதனால் பெறப்பட்ட ஆறு உருபு என்பதூஉம் வெளிப்படல் இல்லது என்பதூஉம் பொதுவிதியால் பெறப் படுதலானும் பொருந்தாது என மறுக்க. ‘உவம உருபுஇலது உவமத் தொகையே’ என்புழியும் இக்கடாவிடை உய்த்து உணர்க. 42 |