சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-42649

என்பன உருபும் பொருளும் உடன்தொக்கன. கருப்புவேலி என்பது நான்காவதன்
‘அதற்கு வினை உடைமை’ என்ற பொருளது; கடிசூத்திரப்பொன் என்பது நான்காவதன்
‘அதுவாகு கிளவி’ என்ற பொருளது. வரைபாய்தல்- ஐந்தாவதன் நீக்கப் பொருளது;
கருவூர்க்கிழக்கு- அதன்எல்லைப் பொருளது சாத்தன் புத்தகம்- ஆறாவதன் பிறிதின்
கிழமைப் பொருளது; கொற்றன் உணர்வு- தற்கிழமைப் பொருளது. மன்றப்பெண்ணை-
ஏழாவதன் இடப்பொருட்கண் தற்கிழமைப் பொருளது; மாரிமா- அதன் இடப்
பொருட்கண் பிறிதின் கிழமைப் பொருளது. இவ்வேற்றுமைத்தொகைகள் விரித்து
உரைக்கப்பட்டமையும் காண்க.

இனிச் சிவஞானமுனிவர் முதற் சூத்திரவிருத்தியில் முப்பஃது மூன்றான் உறழ்ந்த
பத்து என விரியும். இங்ஙனம் உருபொடு வினைச்சொல்லும் ஒருங்கு தொகுதல்,

‘வேற்றுமைத் தொகையே வேற்றுமை இயல’

என்பதனால் கொள்க. ‘வேற்றுமை.....இயல’ என்பது வேற்றுமைத் தொகை விரியுங்கால்
தொகாநிலை வேற்றுமை இயல்பினவாய் விரியும் என்றவாறு. எனவே, அங்ஙனம் விரியும்
இயல்பை உடையது வேற்றுமைத் தொகை என்பதாயிற்று. வேற்றுமைத் தொகையே எனப்
பிரிந்தமையான் முன் வந்த வேற்றுமை தொகாநிலைவேற்றுமை என்பதூஉம்,
தொகாநிலைவேற்றுமை இயல எனவே விரியுங்கால் என்பதூஉம் தாமே போதரும்.
‘உவமத் தொகையே உவமஇயல’ என்பதற்கும் இவ்வாறு உரைத்துக்கொள்க. வேற்றுமைத்
தொகையே வேற்றுமை இயல’ என்றல் தொடக்கத்துச் சூத்திரங்களான் தொகைச்
சொற்கள் விரியுமாறு கூறிய முகத்தான் அவற்றிற்கு இலக்கணம் கூறியவாறு.