“இனி, ‘வேற்றுமை .......... இயல’ என்பது ஆற்றல் உள்ளன தொகும், அல்லன தொகா என்பது விளக்குதற் பொருட்டு எழுந்தது என்பாரும் உளர். அஃது இலக்கணம் அன்மையானும், அப்பொருளும் இதனுள் அடங்குதலானும் அதுபோலியுரை என்க. ‘வேற்றுமை- இயல’ என்றல் தொடக்கத்துச் சூத்திரங்களான் வேற்றுமைத் தொகை முதலியவற்றிற்குச் சிறப்பு இலக்கணம் கூறி, எல்லா- நடைய’ (தொல்.சொல்.420) என்பதனால் பொது இலக்கணம் கூறியவாறும் அறிக” என்று கூறித் தொகாநிலை வேற்றுமையது இயல்பை விளக்கிக் கூறியுள்ளார். இந் நூற்பாவிற்குத் தெய்வச்சிலையார் “வேற்றுமையியல்பு உடையன வேற்றுமைத்தொகை என்றவாறு. வேற்றுமை இயல என்றதனான், வேற்றுமைகட்கு ஓதிய செயப்படு பொருள் முதலாக இடம் ஈறாக வரும் பொருண்மைகள் தொகும் சொல் வேற்றுமைத்தொகையாம் என்று கொள்க. முதல் வேற்றுமை பெயர்ப்பயனிலை கொள்ளும்வழியும் விட்டிசைத்தே நிற்றலானும், எட்டாவது விரிந்து நிற்றலானும் இவையிற்றை ஒழித்து ஏனைய தொகும் என்று கொள்க” என்று விளக்கம் தந்துள்ளனர். சேனாவரையரும் இவ்வாசிரியரும் ஆற்றல் உள்ளன தொகும்; அல்லன தொகா- என்பதனைப் போந்த பொருளாகவே கொண்டுள்ளனர். நன்னூல் கருத்து இவ்வாசிரியரால் மறுக்கப்பட்டுள்ளது. |