இஃது உவமத் தொகை ஆமாறு கூறுகின்றது. இ-ள்: உவம உருபுகள் தொக அவற்றின் பொருள் தொக்க தொகைச்சொற்கள் அவ்வுருபுகள் தொக்கன எனும் தொகாது நின்று அவ்வுவம உருபுதொடர் பொருள் உணர்த்தியாங்கு உணர்த்தும் இயல்பினை உடையவாம் என்றவாறு. எனவே, புலி அன்ன சாத்தன்- மயில் அன்ன மாதர்- என உவம உருபுதொடர்ப்பொருள் உணர்த்தும் ஆற்றல் இல்லன தொகா; அவ்வாற்றல் உடையனவே தொகுவன என்றவாறு ஆயிற்று. வரலாறு: புலிப்பாய்த்துள்- மழைவண்கை- துடிநடுவு- பொன்மேனி- எனவரும். |