இவை புலிப்பாய்த்துளை அன்ன பாய்த்துள்- மழையை ஒக்கும் வண்கை- துடியைஒக்கும்நடுவு- பொன்னை ஒக்கும் மேனி- என விரிதலின் இவையெல்லாம் வேற்றுமைத் தொகை எனப்படும், அதனான் உவமத்தொகை என ஒன்று இல்லைஎனின், அற்றன்று; சொல்லுவார்க்கு அது கருத்தாயின் அவை வேற்றுமைத் தொகையும் ஆம். அக்கருத்தான் அன்றிப் புலி அன்ன பாய்த்துள்- பொன்னைமானும்மேனி- என்றாற்போல வேற்றுமையொடு இயைபு இல்லா உவம உருபுதொடர்ப் பொருட்கண் தொக்கவழி உவமத்தொகை ஆவது அல்லது வேற்றுமைத் தொகை ஆண்டு இன்மையின், வேற்றுமைத்தொகை ஆமாறு இல்லை என்க, 43 |
தொல்காப்பியனார் வினை- பயன்- மெய்- உரு- என்று உவமத்தைப் பகுத்துக் கூறியதனை உட்கொண்டு வினை உவமத்துக்குப் புலிப்பாய்த்துள், பயன் உவமத்துக்கு மழை வண்கை, மெய் உவமத்துக்குத் துடிநடுவு, நிறமாகிய உரு உவமத்துக்குப் பொன்மேனி என்ற எடுத்துக்காட்டுக்கள் தந்துள்ளார். தொல்காப்பியனாருக்கு உவமம் என்பதே சொல். இவ்வாசிரியர் உவமை, உவமம் என்ற இரண்டையும் கொண்டார். உவமம் பொருள் புலப்படுக்கும் கருவியாகவே தொல்காப்பியனாரால் கொள்ளப்பட்டது எனவும், அஃது அணியன்று எனவும் பேராசிரியர் குறிப்பிடுவர். எனவே, பிற்காலத்து உபமா என்பதன் திரிபாகிய உவமையின், தொல்காப்பியனார் குறிப்பிடும் உவமம் என்பது வேறுபட்டதாகும் என்பது அவர் கருத்து. |