‘காலத்து இயலும்’ எனப் பொது வகையான் கூறிய அதனான், மூன்று காலமும் கொள்க. ‘தொகுதி காலத்து இயலும்’ எனவே, அவ்வினை பிரிந்து நின்றவழித் தோன்றாது தொக்கவழித் தொகை ஆற்றலான் காலம் தோன்றும் என்றவாறு ஆயிற்று. வரலாறு: கொல்யானை- அரிவாள்- ஆடுஅரங்கு- செல்செலவு- புணர்பொழுது- செய்குன்று- எனவரும். காலம் உணர்த்தாது வினை மாத்திரம் உணர்த்தும் பெயர், செய்வது முதலாகிய பெயரோடு தொக்குழிக்காலம் உணர்த்தியவாறு கண்டு கொள்க. காலம் உணர்த்துகின்றுழிப் பெயரெச்சப் பொருளவாய் நின்று உணர்த்தும் என்பது ஈண்டு உரையிற் கொள்க. |