இனி, இவ்வாறு அன்றிக் ‘காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை’ (நன்.364) என்று கூறுவாரும் உளராலோ எனின், அற்றன்று; கொன்றயானை என்னும் பெயரெச்சம் காலம் கரந்து கொல்யானை என நின்றதேல், அங்ஙனம் தொக்கு நின்றவழியும் தனக்கு உரிய இறந்த காலம் ஒன்றுமே உணர்த்திநிற்றல் வேண்டும்; அங்ஙனம் நில்லாது முக்காலமும் ஒருங்கு உணர்த்தி நிற்றலானும், கொன்றயானை என விரிந்தவழித் தொகைப் பொருளாகிய முக்காலமும் ஒருங்கு உணர்த்தும் தன்மை சிதைந்து இறந்தகாலம் ஒன்றுமே உணர்த்தி நிற்றலானும், கொல் என்னும் முதல்நிலை வினை யானை என்னும் பெயரொடு தொக்க தொகை ஆற்றலின் அது முக்காலமும் ஒருங்கு உணர்த்தி நிற்பதே வினைத்தொகை என்பது பொருத்தம் உடைத்து என்க. கொல்கின்ற வினை- கொல்லும்யானை- என்பனவும் அன்ன. 44 |