கற்சுனைக் குவளைஇதழ் என ஒன்று ஆயிற்று. பெருந்தோள் என்னும் தொகை ஒருசொல்லாய், பின் பேதை என்பதனொடு தொக்குப் பெருந்தோட்பேதை என ஒன்றாயிற்று. அவை இவ்வாற்றான் அல்லது தொகாமையின் இருசொல் தொகையேயாம் என்க. புலிவிற்கெண்டை என்புழி மூன்று பெயரும் தொகும் என்னாது முதற்பெயர் ஒழித்து ஏனைய இரண்டும் தம்முள் தொக்கு ஒரு சொல்லாய்ப் பின் மற்றையதனோடும் தொகும் எனின், மூன்றாவதற்கும் இரண்டாவதற்கும் ஓர் இயைபு வேறுபாடு இன்மையானும் இரு தொகைப்படுத்தல் பல செய்கைத்து ஆகலானும் அவை மூன்று பெயரும் ஒருங்கு தொக்கன எனவே படும் என்பது.அளவின் பெயர் முதலாயின இருபெயராய் அல்லது தொகா என வரையறுத்தற்கு இருபெயர் பலபெயர் என அடக்கினவற்றையே பெயர்த்தும் கூறினார். கலனே தூணிப் பதக்கு- தொடியேகஃ சரை- நூற்று நாற்பத்துநான்கு- என்புழித் தூணிப்பதக்கு- கஃசரை- நாற்பத்துநான்கு- என்பன ஒரு சொல் போல அளவுப்பெயரும் நிறைப்பெயரும் எண்ணுப்பெயருமாய் வழங்கப்பட்டு வருதலின், கலமும் தூணிப்பதக்கும்- தொடியும் கஃசரையும்- நூறும் நாற்பத்துநான்கும்- என இருமொழியாய் நின்று தொக்கன என்பதே பொருத்தமுடைமை அறிக. உம்மைத்தொகை இன்னபொருள் பற்றித் தொகும் என்னாது ‘அவ்வறு கிளவியும்’எனச்சொல்லே பற்றி ஓதினாரேனும் ஏற்புழிக் கோடலானும், ‘உயர்திணை மருங்கின் உம்மைத்தொகையே’ (343) என்பதனானும் எண்ணும்மைப் பொருட்கண் தொகும் என்பது பெறப்படும். எண்ணின்கண் வரும் இடைச்சொல் பலவேனும் தொக்கு நிற்கும் ஆற்றலுடையது உம்மைப்பெயர் ஆகலான் உம்மைத்தொகை ஆயிற்று. |