வேற்றுமைத்தொகை முதலியன ஏற்படுவதற்குக் காரணமாகிய சொற்கள் அத்தொகைபடத் தொகும் முன்னே இவற்றை இருப்பிடமாகக் கொண்டு அன்மொழித்தொகை தோன்றும் என்றவாறு. இச் செய்தியைச் சேனாவரையரை உள்ளிட்ட பலரும் குறிப்பிட்டுள்ளனர். தொல்காப்பியனார் பண்புதொக வரூஉம் கிளவி யானும்’ (சொல்-418) என்ற நூற்பாவில் அன்மொழித்தொகை பண்புத்தொகை. உம்மைத்தொகை, வேற்றுமைத்தொகை என்பனவற்றின் நிலைக்களத்துத் தோன்றும் என்றார். உரையாசிரியர் முதலாயினார் வினைத்தொகை உவமத்தொகை என்பனவற்றின் நிலைக்களத்தை உரையிற் கொண்டனர். “துடியிடை எனவும் தாழ்குழல் எனவும் உவமத்தொகைப் புறத்தும் வினைத்தொகைப் புறத்தும் அன்மொழித் தொகை வருமால் எனின், துடி என்பதூஉம் தாழ் என்பதூம், இடை- குழல்- என்பனவற்றிற்கு அடையாகி வரின் அல்லது அவற்றை உடையாட்குப் பெயராகுங்கால், இறுதி நின்ற பெயர்ப்பொருண்மை வந்து ஏனைய வாராமையின் ஆகுபெயர் எனின் அல்லது அன்மொழித்தொகை ஆகாது எனக் கொள்க. அதனானே யன்றே இருபெயரொட்டும் என ஆகுபெயர்க்கண்ணே எடுத்து ஓதுவாராயினர் என உணர்க.” தொல்.சொல்.412. தெய்வச்சிலையார். எனவே, உவமத்தொகைப்புறத்தும் வினைத்தொகைப் புறத்தும் அன்மொழித்தொகை வாராது என்பது தெய்வச் சிலையார் கருத்தாகும். நச்சினார்க்கினியர் வினைத்தொகைப் புறத்தும் உவமத் தொகைப் புறத்தும் அன்மொழித்தொகை வருதலைச்சுட்டி |