தொக்க தொகை போல விசேடிப்பதூஉம், விசேடிக்கப்படுவதூஉம் ஆகிய இயைபுபற்றி இன்னோரன்னவையும் பண்புத்தொகை எனப்பட்டன.அற்றேல், தொக்க இருமொழிப் பொருளும் தாராது புறமொழிப்பொருள் தருவது அன்மொழித்தொகை யாகலின் அகர முதல னகர இறுவாய் என்புழி அன்மொழித்தொகையான் அகரமும் னகரமும் ஒழித்து ஒழிந்த இருபத்தெட்டுமே கொள்ளப்படும், அவ்வாறன்றி அவற்றையும் உடன் எண்ணி முப்பஃது என்றல் நிரம்பாதாம் பிற எனின், ஆகுபெயர் விட்ட ஆகுபெயரும் விடாத ஆகுபெயரும் என இருவகை ஆயவாறு போல, அன்மொழித்தொகையும் விட்ட அன்மொழித்தொகையும் விடாதஅன்மொழித் தொகையும் என இருவகைப்படும்; அவற்றுள் இது விடாத அன்மொழித் தொகையாகலின் நிரம்பும் என்க. ‘அகரஈறு’ ‘புள்ளியீற்று முன்’ (தொல்.138) என்றாற் போல்வனவும் அவை. பொற்றொடி புகன்றாள்- ஒண்ணுதல் உண்டாள்- என்பன விட்ட அன்மொழித்தொகை. வடநூலார் விடாத அன்மொழித் தொகையைத் தற்குண சம்விஞ்ஞான வெகுவிரீகி என்றும், விட்ட அன்மொழித்தொகையை அதற்குண சம்விஞ்ஞான வெகுவிரீகி என்றும் கூறுவர். அற்றேல், ஆகுபெயரும் அன்மொழித்தொகையும் தம் பொருள் உணர்த்தாது பிறிது பொருள் உணர்த்துதலான் ஒக்குமாகலின் அவை தம்முள் வேற்றுமை யாதோ எனின், ஆகுபெயர் ஒன்றன்பெயரான் அதனோடு இயைபு பற்றிய பிறிது ஒன்றனை உணர்த்தி ஒருமொழிக்கண்ணதாம்; அன்மொழித்தொகை இயைபு வேண்டாது இருமொழியும் தொக்க தொகை ஆற்றலால் பிறிதுபொருள் உணர்த்தி இருமொழிக் கண்ணதாம். இவை தம்முள் வேற்றுமை என்க. இருபெயரொட்டாகுபெயர் இருமொழிக்கண் வந்தது அன்றோ எனின், அது மக்கட்சுட்டு என்றாற்போலப் பின்மொழி ஆகுபெயராதல் அறிக. இனிச்சேனாவரையர் ஆகுபெயரும் அன் |