இது முற்கூறிய தொகைநிலைத் தொடர்மொழிகள் ஒரு பொருளவாய் நிற்றலே அன்றிப் பலபொருளவாயும் நிற்கும் என எய்தாதது எய்துவிக்கின்றது. இ-ள்: தொகைநிலைத் தொடர்மொழிகள் முற்கூறியவாற்றான் தொக்குநின்ற இடத்துப் பலபொருளவாய் மயங்கும் இயல்பினை உடையன. இரண்டு முதலாக ஏழ் ஈறாக நின்ற பொருள்மேல் மயங்கும் என்று சொல்லுவர் ஆசிரியர் என்றவாறு. வரலாறு: திரையனுர்- கடிப்பகை- பொன்மணி- கருப்புவேலி- உரைவிரி- சொற்பொருள்- என்பன முறையே திரையனால் செய்யப்பட்ட ஊர்- திரையனது ஊர் எனவும், கடிக்குப்பகை- கடியினது பகை- கடியாகிய பகை- எனவும், பொன்னான் ஆயமணி- பொன்னாய மணி- பொன்னின் கண் மணி- பொன்னும் மணியும்- எனவும், கரும்பிற்கு வேலி- கரும்பினது வேலி- கரும்பின்கண் வேலி- கரும்பாற் செய்த வேலி- கரும்பினிற் செய்த வேலி- எனவும், உரையது விரி- உரைக்கு விரி- உரைக்கண் விரி- உரையை விரி- உரைக்கும் விரி- உரைவிரி உடைய நூல்- எனவும், சொல்லால் அறியப்படும் பொருள்- சொல்லின் அறியப்படும் பொருள்- சொற்குப் பொருள்- சொல்லது பொருள்- சொல்லும் பொருள் - சொல்லாகிய பொருள்- சொல்லின்கண் பொருள் எனவும் இரண்டு பொருள் முதலாக ஏழுபொருள் காறும் இருமொழித்தொடர் மயங்கியவாறு காண்க. பிறவும் அன்ன. ‘வாளைமீன் உள்ளல் தலைப்படல்’
என்பது வாளைமீனை உள்ளல் தலைப்படல்- வாளைமீன் உள்ளலைத் தலைப்படல் என இருபொருள் மயங்கிய பன்மொழித் தொடர். |