சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-52683

    அடுக்குத்தொடர்
 

346 அசைநிலை பொருள்நிலை இசைநிறைக்கு ஒருசொல்
இரண்டு மூன்றுநான்கு எல்லைமுறை அடுக்கும்.
 

 

இது மேல் அடுக்கு என்றதன் கூறுபாடும், அடுக்கும் வரம்பும் கூறுகின்றது.

இ-ள்: அசைநிலைக்கண்ணும், விரைவும் துணிவும் உடன்பாடும் ஒரு தொழில்
பலகால் நிகழ்தலும் வெகுளியும் உவகையும் அச்சமும் அவலமும் முதலிய பொருண்மைக்
கண்ணும், இசைநிறைத்தற் பொருட்டும் ஒருசொல் இரண்டு மூன்று நான்கு
எல்லையாகவே அடுக்கி வரப்பெறும் என்றவாறு.

அசைநிலை இருமுறை அடுக்கும் என்றலின் அதற்குப் பேரெல்லை இன்று எனவும்,
பொருள்நிலை மும்முறை அடுக்கும் என்றலின் அதற்குச் சிற்றெல்லை இரண்டும்
பேரெல்லை மூன்றும் அடுக்கும் எனவும், இசைநிறை நான்குமுறை அடுக்கும் என்றலின்
அதற்குச் சிற்றெல்லை இரண்டும், பேரெல்லை நான்கும் அடுக்கும் எனவும் கொள்க.

வரலாறு: மற்றோ மற்றோ- அன்றோ அன்றோ- என்பன அசைநிலை.

‘வந்தது வந்தது கூற்று’ (நாலடி. 4) என்பது விரைவு.
                    அவன் அவன் என்பது துணிவு.
                    வைதேன் வைதேன் என்பது உடன்பாடு.
                    போம்போம் என்பது ஒருதொழில் பலகால் நிகழ்தல்.
                    எய்எய் என்பது வெகுளி.
                    படைபடை என்பது அச்சம்.
                    உய்யேன் உய்யேன் என்பது அவலம்.
                    இவை பொருள் நிலைக்கண் இருமுறை அடுக்கி வந்தன.