இது மரபுவழுக் காப்பதோர் ஒழிபு கூறுகின்றது. இ-ள்: வாரா இயல்பினவற்றை வருவனவாகச் சொல்லுதலும், என்னா இயல்பினவற்றை என்பனவாகக் கூறுதலும் அத்தன்மையன எல்லாம் அவ்வப் பொருள்களின் இயல்பான் இத்தன்மைய என்று சொல்லும் குறிப்புமொழியாம் என்றவாறு. வரலாறு: அந்நெறி ஈண்டு வந்து கிடந்தது- அம்மலை வந்து இதனொடு பொருந்திற்று- எனவும், அவல் அவல் என்கின்றன நெல்- மழை மழை என்கின்றன பைங்கூழ்- எனவும் வரும். இவை வரவும் சொல்லுதலும் உணர்த்தாது இன்ன என்பதனைக் குறிப்பான் உணர்த்தியவாறு காண்க. ‘அன்னவை எல்லாம்’ என்பதனான், இந்நெறி ஆண்டுச் சென்று கிடக்கும்- இக்குன்று அக்குன்றோடு சென்று அணுகும்- கடல் அத்துணை ஆழ்ந்து கிடக்கும்- என்றல் தொடக்கத்தனவும், |