இது முற்கூறிப்போந்த எச்சச் சொற்களுக்கு முடிபு கூறுவான் அவற்றது பெயரும் முறையும் தொகையும் உணர்த்துவது ஆயதோர் ஒழிபு கூறுகின்றது. இ-ள்: பெயரெச்சமும் வினையெச்சமும் எதிர்மறை எச்சமும் பிரிநிலை எச்சமும் ஒழியிசை எச்சமும் உம்மை எச்சமும் என என் எச்சமும் ஆகிய சொல் எச்சம் ஏழொடும், சொல்லெச்சமும் இசைஎச்சமும் குறிப்பு எச்சமும் ஆகிய குறிப்பெச்சம் மூன்றும் கூடத் தொகுதலான் எஞ்சு பொருட்கிளவி பத்து வகைப்படும் என்றவாறு. |