இஃது ஏனையவற்றிற்கு முடிபு கூறுகின்றது- இ-ள்: மாறுகோள் எச்சம் எனப்பட்ட ஏகார எதிர்மறையும் ஓகார எதிர்மறையும் உம்மைஎதிர்மறையும் ஆகிய எதிர்மறை எச்சம் மூன்றும் எதிர்மறைப் பொருளை உணர்த்தும் சொல்லைக்கொண்டு முடிதலும், ஏகாரப் பிரிநிலையும் ஓகாரப் பிரிநிலையும் ஆகிய பிரிநிலை எச்சம் இரண்டும் பிரிக்கப்படாத பொருளை உணர்த்தும் சொல்லைக் கொண்டு முடிதலும், மன்னும் தில்லும் ஓகாரமும் ஆகிய ஒழியிசை எச்சம் மூன்றும் ஒழியிசைப்பொருளை உணர்த்தும் சொல்லைக் கொண்டு முடிதலும், எஞ்சுபொருட்கிளவியும் அவ்வெஞ்சு பொருட்கிளவியான் முடிவதும் ஆகிய உம்மை எச்சம் அவ்வேறுபாடு இரண்டன்கண்ணும் தன்வினை உம்மையொடு தொடர்ந்த சொற்குப் பொருந்திய முடிபு ஆதலும், என என் எச்சம் வினையொடு முடிதலும், ஒழிந்த சொல்எச்சமும் இசை எச்சமும் குறிப்பு எச்சமும் ஆகிய குறிப்பு எச்சம் மூன்றும் ஒழிந்த எச்சங்கள்போலத் தமக்கு மேல் வேறாய்வந்து தம்மை முடிக்கும் எஞ்சுபொருட்கிளவியை உடைய அல்லவாய் அவைதாம் சொல்லுவார் குறிப்பான் எஞ்சி நின்ற பொருளை உணர்த்துதலும் இலக்கணம் என்று சொல்லுவர், இலக்கணங்களை அறிந்தோர் என்றவாறு. |