அறிந்திலன்- என்னும் ஒழியிசையான் முடிந்தவாறு காண்க. பிறவும் முடித்தற்கு ஏற்கும் ஒழியிசையும் அறிந்து கொள்க.சாத்தனும் வந்தான்- கொற்றனும் வந்தான்- என்னும் உம்மை எச்சங்கள் இரண்டும் வந்தான் என்னும் ஒரு வினை கொண்டவாறு காண்க. ஒன்றற்கு எய்தியதே ஏனையதற்கும் வருதலின் ‘ஒருவினை’ என்றார். சாத்தனும் வந்தான்- கொற்றனும் உண்டான்-என வேறு வினைகொண்டவழி உம்மை எச்சமும் எஞ்சு பொருட்கிளவியும் இயையாமை உணர்க. அஃதேல், ‘பைம்புதல் வேங்கையும் ஒள்ளிணர் விரிந்தன நெடுவெண் திங்களும் ஊர்கொண் டன்றே’ அகநா.2
என வினை வேறுபட்டுழியும் தம்முன் இயைந்தனவால்எனின். இணர் விரிதலும் ஊர்கோடலும் இரண்டும் ‘மணம்செய்யலாம் இது’ என்று உணர்த்துவதாகிய ஒரு பொருள் குறித்து நின்றமையின் அவை ஒரு வினைப்பாற்படும் என்பது. பிறவும் அவ்வாறு வருவன அறிந்து ஒருவினைப்பாற்படுத்துக. எஞ்சுபொருட் கிளவி செஞ்சொல் ஆயவழித் தன்வினைகோடல் ஈண்டு அடங்காமையான் அது தன்னினம் முடித்தலாற் கொள்க. சாத்தன் வந்தான்-கொற்றனும் வந்தான்- எனவரும். ‘உம்மை எச்சம் இரு வீற்றானும்’ என்றதனான், உம்மை எச்சத்திற்கு முடிபாகிய எஞ்சுபொருட்கிளவியும் உம்மையொடு வரின் எச்சமாம் என்பதாம். அஃது எச்சம் ஆங்கால் முன்நின்றது எஞ்சுபொருட்கிளவியாம் என்பது. எதிர்மறை உம்மை எதிர்மறைஎச்சமாய் அடங்குதலின் ஈண்டு உம்மை என்றது எச்சஉம்மையேயாம். கொள்ளெனக் கொடுத்தான்- துண்ணெனத் துடித்தான்- ஒல்லென ஒலித்தது- கார் எனக் கறுத்தது- என்னும் என என் எச்சங்கள் வினைகொண்டு முடிந்தவாறு காண்க. செய் |