இன்னுழி இன்னவாற்றான் அல்லது வேறுபடாது என வரைக்கின்றது. இ-ள்: உம்மை எச்சத்தின் எஞ்சுபொருட்கிளவி உம்மை சொல்லாய் வருங்கால், நிகழ்காலத்தோடு எதிர்காலமும் இறந்த காலத்தோடு எதிர்காலமும் மயங்குதலை நீக்கார், அவ்வாறு மயங்கும் முறைமையான் என்றவாறு. ‘முறைநிலையான’ என்றதனான், கூறிய முறையான் அல்லது, எதிர்காலம் முன் நிற்ப ஏனைக்காலம் பின்வந்து மயங்குதல் இல்லை என்பதாம். வரலாறு: கூழ் உண்ணாநின்றான் சோறும் உண்பன் எனவும், கூழ் உண்டான் சோறும் உண்பன் எனவும் அவை கூறிய முறையானே மயங்கியவாறு காண்க. இவற்றொடு இது மயங்குதல் வரையார் எனவே, இறந்த காலத்தோடு நிகழ்காலமும் நிகழ்காலத்தோடு இறந்தகாலமும் வந்து மயங்குதல் வரையப்படும் என்பதாம். ‘தன்மேல் செஞ்சொல் வரூஉம் காலை’ என்றதனான், உம்மை அடுத்த சொல் வருங்கால் வேறுபாடின்றி இரண்டு சொல்லும் ஒருகாலத்தால் வரும் என்பதாயிற்று. |