உரை விளக்கம் நச்சினார்க்கினியர் (தொல்.சொல்.450) உரையை ஒட்டியே தரப்பட்டுள்ளது. செய்யாய் என்ற எதிர்மறையே சில இடங்களில் செய்வாயாக என வேண்டிக்கோடற் பொருண்மைக்கண் உடன்பாட்டுப் பொருளில் செய்யுள்வழக்கிலும் உலகவழக்கிலும் வருமாறு கூறப்பட்டது. சேனாவரையர், பிரயோகவிவேக நூலார், தெய்வச்சிலையார், சிவஞானமுனிவர் ஆகியோர் செய்யாய் என்னும் முன்னிலை வினைச்சொல் ஆய்ஈறு குறைந்து செய் எனவும் ஆகும் என்ற கருத்தினர்; நூற்பாவில் ‘செய்யாய் என்னும் எதிர்மறை வினைச்சொல்’ என்ற தொடர் இன்று ஆதலின், இங்ஙனம் பொருள் கொண்டுள்ளனர். உரையாசிரியர், நச்சினார்க்கினியர், இந்நூலாசிரியர் மூவரும் செய்யாய் என்பது எதிர்மறைச்சொல்; அஃது உடன்பாட்டுப்பொருளும் தரும்’ என்றே கொண்டனர். செய்யாய் என்பதன் பொருளும் செய் என்ற ஏவலின் பொருளும் ஒன்றாகா என்பது இவர்கள் கூறும் விளக்கமாகும். |