இ-ள்: சொல்லான் அன்றிச் சொல்லுவான் குறிப்பான் பொருள் உணரப்படும் சொற்களும் உள, இப்பொருள் இத்தன்மைய என்று சொல்லுதற்கண் என்றவாறு. வரலாறு: செஞ்செவி- வெள்ளொக்கலர்- என்புழி, மணியும் பொன்னும் அணிந்தசெவி எனவும், வெள்ளியது உடுத்த சுற்றம் எனவும் குறிப்பான் அறியப்பட்டவாறு காண்க. குழை கொண்டு கோழி எறியும் வாழ்க்கையர் என்புழி, அன்ன பெருஞ்செல்வத்தார் என்பதூஉம் குறிப்பான் உணரப்படும். இது ‘வெளிப்படை குறிப்பின்’ என்புழி அடக்கும் எனின், ஆண்டுப் பொருள்நிலை இருவகைத்து என்பதல்லது இன்னுழி இப்பொருள் குறிப்பின் தோன்றும் என்னும் வேறுபாடு பெறப்படாமையான் ஆண்டு அடங்காது என்க. |