இது வினைச்சொல் பற்றி மரபு வழு அமைப்பதோர் ஒழிபு கூறுகின்றது. இ-ள்: செயப்படுபொருளைச் செய்த வினைமுதல் போலத் தொழிற்படச் சொல்லுதலும் வழக்கின்கண் இயலும் மரபு என்றவாறு. ‘வழக்கியல் மரபு’ எனவே, இலக்கணம் அன்று என்பதாயிற்று. எ-டு: திண்ணை மெழுகிற்று- கலம் கழீஇயிற்று- எனவரும். திண்ணை மெழுகப்பட்டது என்றுமன் ஆகற்பாலது, அவ்வாய்ப்பாட்டான் அன்றி வினைமுதல் வாய்பாட்டான் வருதலும் வழக்கின்கண் உண்மையான் அமைக்க என வினைச்சொல் பற்றி மரபுவழு அமைத்தவாறு காண்க. இங்ஙனம் வினைமுதல் வாய்பாட்டான் கிளத்தலே அன்றி, எளிதின் அடப்படுதல் நோக்கி, அரிசி தானே அட்டது எனச் செயப்படுபொருளை வினைமுதலாகக் கூறுதலும்’ அடங்குதற்குத் ‘தொழிற்படக் கிளத்தலும்’ என்றார், இதனைக் கருமக்கருத்தன் என்ப. இனி ஒன்றென முடித்தலான், இவ்வாள் வெட்டும் எனக் கருவியைத் தானே செய்வதாகக் கூறும் கருவிக் கருத்தனும், அரசன் எடுத்த ஆலயம் என ஏவினானைக் கருத்தனாகக் கூறும் ஏவற்கருத்தனும் கொள்க. |