சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-66715

விசேடிக்கப்படும் சொல்லாம். பிறவும் விசேடித்து அல்லது வாராதனவும், விசேடித்தும்
விசேடியாதும் வருவனவும் வழக்கும் செய்யுளும் நோக்கி உணர்க.

வேறுபடுக்கும் சொல்லே யாவன இவை எனத் தொகுத்து உணர்த்துதற்கும்,
‘உரிச்சொல் மருங்கினும் உரியவை உரிய’ எனச் சூத்திரம் சுருங்குதற்கும் இடைச்சொல்
ஓத்தினுள்ளும் உரிச்சொல் ஓத்தினுள்ளும் வையாது இரண்டு பாத்திரத்தையும் ஈண்டு
வைத்தார். 66
 

விளக்கம்
 

உரை சேனாவரையர் உரையே.

உறு பொருள் முதலிய நான்கும் விசேடித்தே வரும் உரிச்சொற்களுக்கு
எடுத்துக்காட்டுக்களாம்.

குருமணி, விளங்குகுரு முதலிய நான்கும் முன்னர் விசேடித்தும் பின்னர்
விசேடிக்கப்பட்டும் ஒரு சொல்லே வருதற்கு எடுத்துக்காட்டுக்களாம்.

குரு விளங்கிற்று முதலியன விசேடிக்கப்பட்ட உரிச்சொற்களாம். ஆகவே
இடைச்சொல் விசேடித்தே வரும் என்பதும், உரிச்சொற்களுள் விசேடித்தே வருவனவும்
உள, விசேடித்தும் விசேடிக்கப்பட்டும் வருவனவும் உள என்பதும் உணர்த்தப்பட்டன.

இந்நூற்பாக்கள் ஈண்டு வைக்கப்பட்டதன் காரணம் காட்டப்பட்டுள்ளது.
 

ஒத்த நூற்பா
 

 

முழுதும் தொல்.சொல்.456, மு.வீ.ஒ.121