இது முற்கூறிப் போந்த இயற்சொல் முதலிய நால்வகைச் சொற்களானும் ஈட்டப்படும் செய்யுட்கு உரிய பொருள்கோளின் பெயரும் முறையும் தொகையும் கூறுகின்றது. இ-ள்: யாற்றுநீர்ப் பொருள்கோளும் மொழிமாற்றுப் பொருள்கோளும் நிரல்நிறைப் பொருள்கோளும் பூட்டுவில் பொருள்கோளும் தாப்பிசைப் பொருள்கோளும் அளைமறிபாப்புப் பொருள்கோளும் கொண்டு கூட்டுப் பொருள்கோளும் அடிமறிமாற்றுப் பொருள்கோளும் எனப் பொருள்கோள் எட்டுவகைப்படும் என்றவாறு. இவை அனைத்தும் காரணக்குறி என்று உணர்க. ஏனைய போல விகாரப்படாது இயல்பாகவே தம்முள் கூடிப் பொருள் அற்று வருதலின், யாற்றுநீர்ப் பொருள்கோள் முன் வைக்கப்பட்டது. ஏனையவற்றிற்கும் கிடக்கை முறைக் காரணம் கண்டுகொள்க. 67 |