சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-68719

யாற்றுநீர்ப் பொருள்கோள்
 

362 அவற்றுள்
மற்றைய நோக்காது அடிதொறும் வான்பொருள்
அற்றுஅற்று ஒழுகும் அஃது யாற்றுப் புனலே.
 

 

இது நிறுத்த முறையானே யாற்றுநீர்ப் பொருள்கோள் வருமாறு உணர்த்துகின்றது.

இ-ள்: மேற் கூறிய பொருள்கோள் வகை எட்டனுள், ஏனைய அடிகளை நோக்காது
அடிதொறும் பொருள் முடிவு பெற்று வருவது யாற்றுநீர்ப் பொருள்கோளாம் என்றவாறு.

ஏனைய போல் விகாரப்படாது இயல்பாகவே தம்முள், கூடிப்பொருள் அற்று
வருதலின்; ‘வான்பொருள்’ என்றார்.
 

  எ-டு:
அலைப்பான் பிறிதுஉயிரை ஆக்கலும் குற்றம்
விலைப்பாலின் கொண்டுஊன் மிசைதலும் குற்றம்
சொலற்பால அல்லாத சொல்லுதலும் குற்றம்
கொலைப்பாலும் குற்றமே யாம்.’-




நான்மணி- 102
 

விளக்கம்
 

இது மயிலைநாதர் கருத்து.

ஆற்றொழுக்கு மேட்டினின்றும் பள்ளத்தை நோக்கி ஒரு திசையாகச்
செல்வதுபோல, பாடல் தொடக்கம் முதல் இறுதி காறும் ஒரு நெறியில் பொருள்
கொள்ளக்கிடக்கும் இப்பொருள்கோளுக்கு, ‘சொல்லருஞ் சூற்பசும் பாம்பின்’ (சீவக.53)
என்பதனை எடுத்துக்காட்டி, அடிதொறும் பொருள் அற்று முடியும் ‘அலைப்பான்’
என்பதனை அடிமறி மாற்றிற்கு எடுத்துக்காட்டாக்குவர் நன்னூல் விருத்திகாரர்.