இது நிறுத்த முறையானே மொழிமாற்றுப் பொருள்கோள் ஆமாறு கூறுகின்றது. இ-ள்: தாம் குறித்த பொருளிற்குப் பொருந்திய மொழிகளை ஓரடியுள்ளே மாற்றிச் சொல்லுதல் மொழி மாற்றுப் பொருள்கோள் என்றவாறு. எ-டு: ‘சுரைஆழ அம்மி மிதப்ப வரைஅனைய யானைக்கு நீத்து முயற்கு நிலைஎன்ப கானக நாடன் சுனை.’ இதனுள் நின்றவழி நிற்ப இயையாமையின், சுரை மிதப்ப அம்மி ஆழ எனவும், யானைக்கு நிலை முயற்கு நீத்து எனவும் ஓரடியுள்ளே மாற்றிக் கூட்ட இயைந்தவாறு காண்க. இதனைச் சுண்ண மொழிமாற்று என்று ஈரடி இடத்தே கொள்ளின், ஏனை அடிகளுள்ளும் ஏனைப்பாக்களுள்ளும் வரப்பெறாமையின் ‘மாற்றி ஓரடியுள் வழங்கல் மொழிமாற்று’ என்றார். 59 |