நிரல்நிறை- வரிசைப்பட நிறுத்துவது- இது பொருளணி வகையுள் ஒன்று. ‘கொடிகுவளை’ என்ற பாடலில் கொடி, நுசுப்பு, குவளை உண்கண், கொட்டைமேனி, மதிமுகம், பவளம்வாய், முத்தம் முறுவல், பிடிநடை, பிணை நோக்கு, மயில் சாயல் என நிரல்நிறை அமைந்தவாறு. ‘மாசுபோகவும்’ என்ற பாடற்பகுதியில் மாசுபோகக் கடிபுனல் மூழ்கிக் காய்பசி நீங்க அடிசில் கை, தொட்டு- என அமைந்தவாறு. ‘உடலும் உடைந்தோடும்’ என்ற பாடலில் கடல் உடலும், இருள் உடைந்தோடும். ஆம்பல் ஊழ்மலரும், பாம்பு பார்க்கும்- என நிரல்நிறை அமைந்தவாறு. ‘காதுசேர் தாழ்குழையாய்’ என்ற பாடலில் மண் கா அமிர்தம் து, மங்கையர்தோள் சேர், மாற்றாரைத் தாழ், ஏற்றார்க்குக் குழை, நுண்ணியவாயபொருள் ஆய்-என நிரல்நிறை அமைந்தவாறு. ‘களிறும் கந்தும் போல’ என்ற பாடற்பகுதியில் களிறு போலக்கலனும், கந்து போலக் கூம்பும் தோன்றும்- என எதிர்நிரல் நிறை அமைந்தவாறு. ‘ஆடவர்கள்’ என்ற பாடலில் வெஃகாவில் கிடந்தான் ஊரகத்தில் இருந்தான், பாடகத்தில்நின்றான்- என எதிர்நிரல் நிறை அமைந்தவாறு. |