சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

726 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

இ-ள்: செய்யுளில் முதல் ஈறுகளில் நின்ற சொற்கள் தம்மில் பொருள்குறித்து
நிற்பது பூட்டுவில் பொருள்கோளாம் என்றவாறு.

எ-டு:
                    ‘திறந்திடுமின் தீயவை பிற்காண்டும் மாதர்
                    இறந்துபடின் பெரிதாம் ஏதம்- உறந்தையர்கொன்
                    தண்ஆர மார்பின் தமிழர் பெருமானைக்
                    கண்ணாரக் காணக் கதவு” முத்தொள்ளாயிரம்
எனவரும். 71
 

விளக்கம்
 

வில்லின் இரு முனையும் நாணால் இணைத்து வில்லினைத் தொழிற்படச் செய்தல்
போலப் பாடலின் முதற்சொல்லும் ஈற்றுச் சொல்லும் பொருளான் இயைந்து பாடலைச்
சிறக்கச் செய்யும் பொருள்கோள் விற்பூட்டுப் பொருள்கோளாம். இதனை மாறன்
அலங்கார ஆசிரியர் பொருளணி வகையுள் ஒன்றாக்குவர்.

‘திறந்திடுமின்’ என்ற பாடலில்
                    ‘திறந்திடுமின் கதவு’

என்ற முதன்மொழியும் இறுதிமொழியும் இணைந்து பொருள் பட்டமை காண்க.
 

ஒத்த நூற்பாக்கள்
 

 

முழுதும்
‘பூட்டுவில் என்ப பூட்டிய வில்போல்
பாட்டுஇரு தலைஒரு பால்பொருள் கொளலே.’
 
நன் 415, மு.வீ.செய்யுளணி.27


தொ.வி.309