சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-72727

தாப்பிசைப் பொருள்கோள்
 

366
 
இடைநிலை மொழியே ஏனைஈர் இடத்தும்
நடந்து பொருளை நண்ணுதல் தாப்பிசை.
 

 

இது நிறுத்த முறையானே தாப்பிசைப் பொருள்கோள் ஆமாறு கூறுகின்றது.

இ-ள்: செய்யுளின் இடைநின்ற சொல் முதலினும் ஈற்றினும் சென்று பொருளை
ஒட்டிநிற்பது தாப்பிசைப் பொருள்கோளாம் என்றவாறு.
 

  எ-டு:
‘உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன்உண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு’


குறள்.255
 
என்புழி, ஊன் என்னும் இடைநின்ற சொல் ஏனை ஈரிடத்தும் சென்று ஒட்டியவாறு
காண்க. 72
 

விளக்கம்
 

ஊசலின் இடையே உள்ள தாம்பு ஊசலை இயக்குதற்கண் இரு மருங்கும் சென்று
பயன்படுவது போல, ஒரு பாடலின் இடையில் உள்ள சொல் இருமருங்கும் சென்று
பொருள் வரும் நிலை தாப்பிசைப் பொருள்கோளாகும். தாம்பு-கயிறு. இதனை
இடைநிலைத்தீவகம் என்ற பொருளணிவகை யாக்கு அணிநூலார்.

‘உண்ணாமை’ என்ற பாடலில் இடையில் உள்ள ஊண் என்ற சொல் முன்னும்
பின்னும் வந்து ‘ஊன் உண்ணாமை’ ‘ஊன் உண்ண’ என்று பொருள்பட்டவாறு காண்க.
 

ஒத்த நூற்பாக்கள்
 

  முழுதும்
‘தாப்பிசை முதல்கடைத் தன்பொருள் தருமொழி
யாப்புஇசை இடையே இயம்புதல் என்ப’
நன்.416


தொ.வி.310