சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-1873

பெயர் இடுகுறி, காரணம், மரபு, ஆக்கம் என்ற பகுப்புக்களை உடையது. பெயருள்
வினையாலணையும்பெயர் ஒன்றுமே காலம் காட்டும். பெயர் வேற்றுமை ஏற்கும்
திணைபால் இடங்களுக்குச் சிறப்பாகவும் பொதுவாகவும் உரிமை பூண்டுவரும் என்றவாறு.

தெங்க கமுகு என்ற மரப்பெயர்கள் அவற்றின் காய்களை உணர்த்தும்வழி
ஆகுபெயராம் என்பது.

வினைமுற்றுத் திரிந்தும் திரியாமலும் வினையாலணையும் பெயரை உண்டாக்கும்.
வினைச்சொல் பகுதியிலும் பெயர்ச்சொல் விகுதியிலும் பொருள் சிறந்து நிற்கும். எனவே
எடுத்தல் ஓசையால் கூறப்படும் வினைமுற்றுத் திரியாது வினையாலணையும் பெயராதற்கு
அது படுத்தல் ஓசையால் கூறப்படல் வேண்டும். வினைமுற்றுத் திரிந்து உண்டாக்கும்
வினையாலணையும் பெயர்க்கு இவ்வோசை வேறுபாடு தேவையின்று.

தேய்த்தார், ஏறிற்று என்பன தேய்க்கப்பட்டாரையும் ஏறப்பட்டதனையும்
உணர்த்துவதால் அவை செயப்படு பொருளாம். சொன்னவன், உண்பவை என்பனவும்
சொல்லப்பட்டவன், உண்ணப்படுபவை என்பனவற்றை உணர்த்துவதால்
செயப்படுபொருளாம் என்க.

உண், தின் என்ற வினைப்பகுதிகளொடு தொழிற்பெயர் விகுதி சேர்தலான் ஆகிய
உண்டல் தின்றல் என்பன காலம் காட்டா விடினும் புடைபெயர்ச்சியை உணரத்தும்
எனவும், பூசல் வேட்டை என்பன அங்ஙளம் அமைந்தன அன்மையின்
புடைபெயர்ச்சியையும் உணர்த்தா எனவும் கூறினார். தொழிற்பெயருக்கும் வினையால்
அணையும் பெயர்க்கும் உள்ள வேற்றுமை ‘வினையின் பெயரே’ (188) என்ற நூற்பாவில்
கூறப்படும்.