‘தெங்கங்காய் போலத் திரண்டுருண்ட பைங்கூந்தல் வெண்கோழி முட்டை உடைத்தன்ன மாமேனி அஞ்சனத் தன்ன பசலை தணிவாமே வங்கத்துச் சென்றார் வரின்’
என்புழியும், ‘ஆரிய மன்னர் பறையின் எழுந்தியம்பும் பாரி பறம்பின்மேல் தண்ணுமை- காரி விறன்முள்ளூர் வேங்கைவீ தான்நாணும் தோளாள் நிறன்உள்ளூர் நின்றது அலர்’
என்புழியும் முறையானே ‘ஆலத்துமேல குரங்கு குளத்துள குவளை’ என ஈரடியுள்ளுப் , ‘அஞ்சனத்தன்ன பைங்கூந்தல் தெங்கங்காய் போலத் திரண்டு உருண்ட வெண்கோழி முட்டை உடைத்தன்ன பசலை’ எனவும், ‘பாரிபறம்பின்மேல் தண்ணுமை தான் நாணும் தோளாள் நிறன் லிறன் முள்ளூர் வேங்கைவீ, உள்ளூர் உள்ளதாகிய அலர் ஆரியமன்னர் பறையின் எழுந்து இயம்பும்’ எனவும் இரண்டு இறந்த பல அடியினுள்ளும் நின்ற சொற்களைப் பொருள் தருதற்குப் பொருந்தும்படி முன்னும் பின்னும் கொள்வழி அறிந்து கொளுவிப் பொருள்கொண்டவாறு கண்டு கொள்க. பிறவும் அன்ன. இது பல அடிகளினும் வருதலின் மொழிமாற்றுப் பொருள்கோளின் வேறாயிற்று. 74 |