இதுவும் ஒருசார் வழுவமைதி ஆகிய ஒழிபு கூறுகின்றது. இ-ள்: பெயர்நிலைக் கிளவியின் ஆஅகுநவும் என்பது பெயர்க்கண் நிலைபெற்ற சொல்லிடத்து ஒரு திணைப்பெயர் ஒருதிணைக்காய் வருவனவும் என்றவாறு. அவை ஓர் எருத்தை நம்பி என்றும், ஒரு கிளியை நங்கை என்றும் வழங்குதலாம். திசைநிலைக் கிளவியின் ஆஅகுநவும் என்பது திசைக்கண் நிலைபெற்ற சொல்இடத்து வாய்பாடு திரிந்து வருவனவும் என்றவாறு. அவை புலியான்- பூசையான்- என்னும் தொடக்கத்தனவாம். தென்னெறி மொழிவயின் ஆஅகுநவும் என்பது அடிப்பட்ட நெறியான் வழங்குதல் உடைய முதுமொழி ஆகிய செய்யுள் வேறுபாட்டின்கண் இயையாதன இயைந்தனவாய் வருவனவும் என்றவாறு. |