இது நூல்பற்றி நிகழ்வதொரு வழுவமைதி கூறுகின்றது. இ-ள்: அக்காலத்து உண்மையான் தொல்லாசிரியர் நூலுள் விதிக்கப்பட்டனவற்றுள் சில இக்காலத்து இன்மையான் அவற்றிற்கு யாம் இலக்கணம் கூறாது அவற்றை விடுதலும், அக்காலத்து இன்மையான் அந்நூலுள் விதிக்கப்படாதனவற்றுள் சில இக்காலத்து உண்மையான் அவற்றிற்கு யாம் இலக்கணம் கூறுதலும் முன்னோர் நூலின் முடிபுநோக்கி முறையானே குன்றக் கூறலும் மிகைபடக்கூறலும் ஆகிய குற்றம் ஆகா, காலக் கூறுபாட்டான் என்றவாறு. |
கேட்டை, நின்றை, காத்தை, கண்டை, கண்டீர், கொண்டீர், சென்றது, போயிற்று முதலியன முற்காலத்தில் கட்டுரைக்கண் அசையாய் வந்தன. (தொல்.சொல்.424, 425) |