பெயர். திணிதோளான் - சுரிகுழான் - வரைமார்பான்- செங்கண்ணான் - அலைகாதான் என்றாற்போல்வன எல்லாம் சினைபற்றி வந்த சினைப்பெயர். பெரியான் - சிறியான் எனவும்,அறிவன் புலவன் - எனவும், பொன் ஒப்பான்- ஒப்பான் எனவும், கூனன் - குறளன் எனவும், கரியான் செய்யான் எனவும், மகன்- மானுடன் - தேவன் - நரகன் எனவும், அந்தணன் - அரசன் - வணிகன் - வேளாளன் எனவும், சேரன்-சோழன் - பாண்டியன் - மலையமான் - கட்டிமான் எனவும், ஆசிரியன் - படைத்தலைவன் - சேனாவரையன் எனவும் வரும் இத்திறத்தன எல்லாம் குணம் பற்றி வந்த பண்புப்பெயர். ஓதுவான் - ஈவான் - உண்பான் - உறங்குவான் எனவும் ஊணன் - தீனன்எனவும், தச்சன் - கொல்லன் கணக்கன் - பிணக்கன் எனவும் வரும் இத்திறத்தன எல்லாம் தொழில்பற்றி வந்த தொழிற்பெயர்; அவன்-இவன் உவன் எனவும், அன்னன் அனையன் எனவும், வரும் இத்திறத்தன எல்லாம் சுட்டு அடுத்து வந்த சுட்டுப்பெயர். எவன்- ஏவன் - யாவன் என்றாற்போல்வன எல்லாம் வினா அடுத்து வந்த வினாப்பெயர். பிறன்-மற்றையன்- என இவை இடைச்சொற்களாகிய பிற- மற்றை அடுத்துவந்தபெயர். நம்பி-ஆடூஉ- விடலை கோ-வேள்- குரிசில்- தோன்றல் என்பன தனிப்பெயர். ‘இன்ன’ என்பதனானே, ஆண்மகன்- ஏனாதி- காவிதி- எட்டி- வில்லி- வாளி- குடுமி- சென்னி- கிள்ளி- வழுதி- செட்டி- கொற்றந்தை- சேய்- ஏந்தல்- செம்மல்- அண்ணல்- ஆண்டையான்- ஆங்கணான்- ஆயிடையான்- என்றாற்போல்வனவும் கொள்க. அந்தணன் முதலியன ஒரோவழிப் முதலியவற்றையும் உணர்த்தும் அன்றே? அவ்வழி அஃறிணைப் பெயராமேனும் உயர்திணை ஆண்பால் உணர்த்தல் பெரும் பான்மை ஆகலின் சாதிப்பெயராகக் கூறினார். |