மேல் என்றது 176ஆம் நூற்பாவினை. நால்வகைக் கிளைப்பெயர் ‘தநநு எம்முதல் மகரம் இடையிட்டு னளர வாம் ஈற்றன சுற்றப் பெயரே.’ என்ற நூற்பாவான் உணரப்படும். குழூஉப்பெயருள் கூடிவரு வழக்கின் ஆடியற் பெயராகிய தற்காலிகப் பெயரையும் இயைத்துக்கொண்டார். வெற்பன் .... குறவன் - குறிஞ்சித்திணைப்பெயர். எயினன், மறவன் - பாலைத்திணைப்பெயர். நாடன்...ஆயன் - முல்லைத்திணைப்பெயர். மகிழ்நன்.....களமன் - மருதத்திணைப்பெயர். சேர்ப்பன்.....நுளையன் - நெய்தற்றிணைப்பெயர். அருவாளன் - தேயப்பெயர். காரான்- கார்காலத்தவன்- காலப்பெயர். சினைப்பெயர் அடையடுத்தே வரும் என்பதனைத் திணிதோளன் முதலிய எடுத்துக்காட்டுகளுள் காண்க. கதி-மக்கட்கதி, தேவகதி, நரககதி என்பன. சாதி- அந்தணச்சாதி முதலியன. குடிப்பெயர்- சேரன் முதலியன; என்னை? ‘குடிப்பெயர் ஆவன கூறுங் காலைச் சேரன் சோழன் பாண்டியன் என்றிவை போல்வன பிறவும் பொருத்தம் கொளலே.’ என்பது பன்னிருபாட்டியல் நூற்பா ஆகலான். ஊணன், தீனன், உணவை உடையவன்,தின்பண்டம் உடையவன் என்னும் பொருளன. ஏனாதி, காவிதி, எட்டி என்பன சிறப்புப் பெயர்கள். அந்தணன் முதலியன பாம்பினை உணர்த்துமாறு, |