பாயிரம் செய்யப்பட்டகாலம் நூல் செய்யட்டகாலத்திற்குப் பிற்பட்டது எனினும். பாயிரம் செய்தார் நூலாசிரியர் கருத்தை முற்றும் உட்கொண்டே பாயிரம் செய்தல் மரபு ஆகலின், பாயிரத்தில் கூறப்பட்டதும் நூலாசிரியர் கருத்து என்றே ஒற்றுமைநயத்தால் கொண்டு நச்சினார்க்கினியர் தொல்காப்பியச் சொற்படலத் தொடக்கத்தில் “இவ்வதிகாரம் என்ன பெயர்த்தோ எனின், மேல் பாயிரத்துள் ‘எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி’ என நிறுத்த முறையானே எழுத்து உணர்த்திச் சொல் உணர்த்துகின்றார் ஆகலின் சொல்லதிகாரம் என்னும் பெயர்த்து” எனக்கூறிய அவர்தம்மதம் பற்றி, இவ்வாசிரியர் சொற்றதன்கண் குறைகாண்டல் ஏற்புடைத்தன்று. பாயிரக்கருத்தே நூலாசிரியர் கருத்துமாக அமைதலின் அன்றே, தொல்காப்பியனார் முதலானார் தம் நூற்படலங்களின் முறைவைப்பைத்தாமே ஓதாதுவிடுத்தனர் என்பதும் உளங்கொளத்தக்கது. நிறுத்த முறையானே- தாம்பண்டே உட்கொண்ட முறைப்படி. |