சூறாவளி |
அஃறிணை இயற்பெயர்பால் வரையப்படாது நிற்பது சொல் இயல்பு என்னாது, கள்ளொடு சிவணாமையால் என்றார் உழத்திகள் மறத்திகள் என்றாற்போலும் உயர்திணைப் பெயரும் கள்ளொடு சிவணாவழிப் பால் வரையப்படாது நிற்றல் வேண்டும். அங்ஙனம் இன்மையின் அது சொல் இயல்பாம் என்க. |
அமைதி |
கள் ஈறு அஃறிணைக்கண் பன்மை சுட்டுதற்கு வருவது என்பது, |
| ‘கள்ளொடு சிவணும் அவ்வியற் பெயரே கொள்வழி உடைய பலவறி சொற்கே’ | தொல்.சொல். 169 |
என்பதனால் அறியப்படும். உயர்திணைக்கண் கள்ளீறு பன்மை சுட்டவருவது பெரும்பாலும் விகுதிமேல் விகுதியாய்ப் பிற்காலத்தார் வழக்காம். கள்ளொடு சிவணியவழி அஃறிணைச்சொல் பன்மையையும், சிவணாதவழி ஒருமை பன்மை இரண்டனையும் சுட்டிவரும் மரபை உட்கொண்டு ஆசிரியர் சொற்றதை உள்ளவாறு உணராமல், உழத்திகள் மறத்திகள் என்றாற்போலும் உயர்திணைப்பெயர் கள்ளொடு சிவணாதவழி இகர ஈற்றான் ஒருமை சுட்டிவருதலையும் உளங் கொள்ளாது, மறுப்பு என வேண்டியே இங்ஙனம் வரைந்த தன் பொருத்தமின்மை ஓர்க. |
பொதுப்பெயர்-முறையும் தொகையும் |
183 | முதற்பெயர் நான்கும் சினைப்பெயர் நான்கும் சினைமுதல் பெயர்ஒரு நான்கும்முறை இரண்டும் தன்மை நான்கும் முன்னிலை ஐந்தும் எல்லாம் தாம்தான் இன்னன பொதுப்பெயர். | |