சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-2593

நிறுத்த முறையானே ஒன்றற்கு ஏற்ப கூறிப் பொதுப்பெயர் கூறுவனவற்றுள் இஃது
அதன் பெயரும் முறையும் தொகையும் கூறுகின்றது.

இ-ள்: சாத்தன் சாத்தி கோதை யானை என்றாற்போல வழங்குதல் பயத்தவாய்
நிமித்தம் இன்றிப் பொருள் பற்றி வரும் இடுகுறிப் பெயராகிய முதற்பெயர்வகை
நான்கும், முடவன் முடத்தி செவியிலி நெடுங்கழுத்தல் என்றாற்போலச் சினைஉடைமை
ஆகிய நிமித்தம் பற்றி முதல் மேல் வரும் சினைப்பெயர்வகை நான்கும், முடக்கொற்றன்
முடக்கொற்றி கொடும்புறமருதி பெருங்கால்யானை என்றாற் போலச் சினைப் பெயரொடு
தொடர்ந்து அல்லது பொருள் உணர்த்தாது வரும் சினை முதல் பெயர்வகை நான்கும்,
தந்தை தாய் என்றாற்போலப் பிறவியான் ஒருவரொடு ஒருவர்க்கு உளதாய இயைபு பற்றி
வரும் பெயராகிய முறையுடைய பொருள் மேல் வரும் முறைப் பெயர்வகை இரண்டும்,
யான்- நான்- யாம்- நாம்- எனவரும் தன்மைப் பெயர் வகை நான்கும், எல்லீரும்-
நீயிர்- நீவிர்- நீர்- நீ - என வரும் முன்னிலைப் பெயர்வகை ஐந்தும், எல்லாம் எனவும்
தாம் எனவும் தான் எனவும் விதந்து ஓதப்பட்ட பெயர்வகை மூன்றும் ஆகிய
இருபத்தாறு பெயரும், இவைபோல்வன பிறவும் விரவுப் பெயர்களாம் என்றவாறு.

இவைபோல்வன பிறவாயின: மக- குழவி என்றாற் போல்வனவும், காடன்- காடி-
நாடன்- நாடி- தரையன்- திரையன் என்றாற்போல்வனவும், முதியான் எனப் பிராயம்
பற்றியும் சுமையன் எனத் தொழில் பற்றியும் வருவன போல்வனவும், பிறவும் ஆம். 25
 

விளக்கம்:
 

இயற்பெயர் முதலிய நான்கன் விளக்கத்தையும் உரையில் காண்க. நிறுத்தமுறை-176 ஆம் நூற்பாவில் கூறிய முறை.