செய்வது இல்வழி நிகழ்காலத்தான் அமைதலும் நூற்பாவானும் உரையானும் விளக்கப்பட்டுள்ளன. பின், வினாவிலக்கணத்தோடு வினாவகைகள் நன்னூலை ஒட்டிக் கூறப்பட்டுள்ளன யாது, எவன் என்ற வினாக்களின் இயல்பு தொல்காப்பியத்தால் விளக்கப்பட்டுள்ளது. பின், செப்பின் இலக்கணமும் வகைகளும் நச்சினார்கினியரை ஒட்டி விளக்கப்பட்டுள்ளன. செப்பினும் வினாவினும் சினைமுதற்கிளவிகள் மயங்கல் கூடாது என்பது வற்புறுத்தப்பட்டுள்ளது. ‘அல்லது இல்’ என்ற வாய்ப்பாட்டைப் பயன்படுத்தி இல்லை என்று கூறும் முறை சேனாவரையர் உரையை ஒட்டி விளக்கப் பெறுகிறது. மரபின் இலக்கணம் நன்னூலை ஒட்டிப் பேசப்படுகிறது. பொருள் முதலிய ஆறனையும் அடையாகப் பெற்ற மொழிகள் பெரும்பாலும் இனம் சுட்டாது வழுவமைதியாகவும் வருமாறு பேசப்படுகிறது. இயற்கைப் பொருள் செயற்கைப்பொருள்களின் இயல்புகள் தொல்காப்பியத்தை ஒட்டியே கூறப்பட்டுள்ளன. அடை சினை முதல் பற்றிய செய்திகள் நன்னூலை யொட்டி விளக்கப்பட்டுள்ளன. இனைத்தென அறிபொருளும் உலகின் இலாப்பொருளம் வினைப்படு தொகுதிக்கண் உம்மை பெறுமாறு, சேனாவரையர் உரையை உட்கொண்டு நூற்பாவாயிலாகவும் உரைவாயிலாகவும் விளக்கப்பட்டுள்ளது. பின், சுட்டுப்பெயர் வருமாறு நன்னூலையொட்டி விளக்கப்பெறுகிறது. உரையில், ‘சுட்டு முதலாகிய காரணக் கிளவி’ பற்றியும், தொடரைச் சுட்டும் சுட்டுப்பற்றியும் உரிய செய்திகள் சேனாவரையர் உரையை ஒட்டி விளக்கப் பெற்றுள்ளன. |