திணை முதலியன பற்றிய பெயர்கள் முன்னரும், இயற்பெயர் பின்னரும் வருதல் வேண்டும் என்பது நன்னூலை ஒட்டி விளக்கப்பட்டுள்ளது. ஒரு பொருளை உணர்த்தும் பல பெயர் வினைகொள்ளுமாறும், ‘வேறுவினைப் பலபொருள் தழுவிய பொதுச்சொல்’ முடிபும் அடுத்து ஓதப்பட்டுள்ளன. வினை சார்பு முதலியவற்றான் விளக்கம் பெறாத பல பொருள் ஒருசொல் சிறப்பு அடை கொடுத்து விளக்கப்படல் வேண்டும் என்பது வற்புறுத்தப்பட்டுள்ளது. ஒரு பொருள் வேறுபாடு வெளிப்படையாகப் புலனாகாதபடி அமையுமாயின், அது புலனாதற்குரிய சொற்களைப் பெய்தே கூறுதல் வேண்டும் என்ற மரபு வலியுறுத்தப்பட்டுள்ளது. எடுத்த மொழி இனம் செப்பலும் உரித்து என்ற அருத்தாபத்தி அளவை விளக்கப்படுகிறது. ஒரு பெயர்ப் பொதுச்சொற்களைத் தலைமைபற்றியோ பன்மைபற்றியோ பெயரிடுதல் வேண்டும் என்ற மரபு தொல்காப்பியத்தை ஒட்டி வலியுறுத்தப்படுகிறது. வழக்கை அடிப்படையாகக்கொண்டு பொதுச்சொற்கள் ஆண்மையையோ பெண்மையையோ சிறப்பாக உணர்த்தும் திறன் புலப்படுகிறது. இரட்டைக்கிளவியைப் பிரித்தல் கூடாது என்பது காரணத்தொடு வற்புறுத்தப்படுகிறது. ‘பெயர்வினை இடத்து னளரய ஈற்றயல்-ஆஓ ஆதல்’ குறிப்பிடப்படுகிறது. உருபும் எச்சங்களும் எதிர் மறுத்து மொழியினும் பொருள்நிலையில் மாறா என்ற ஓம்படை ஆணை உணர்த்தப்படுகிறது. உருபுகளும், வினையெச்சங்களும் வினைமுற்றுக்களும் பெயரெச்சங்களும் அடுக்கி முடிபு கொள்ளும் முறைமை தொல்காப்பியத்தையும் சேனாவரையர் உரையையும் ஒட்டிக் குறிக்கப்பட்டுள்ளது. |