பக்கம் எண் :

12 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

இடைப்பிறவரல் நன்னூலை ஒட்டி நவிலப்பட்டுள்ளது. இறுதியில் வரும்
பெயர்வினைகள் முதற்கண்ணும் வரும் என்பது குறிக்கப்பட்டுள்ளது. இறுதிக்கண் உருபு
தொகுதல் இரண்டாம்வேற்றுமைக்கண்ணும் ஏழாம்வேற்றுமைக்கண்ணுமேயாம் என்ற
செய்தி தொல்காப்பியத்தை ஒட்டி நியமிக்கப்பட்டுள்ளது. ஒரு பாலின்மேல்
வைத்துக்கூறியது ஏனைப்பால்களுக்கும் பொருந்துமாறு அமைவது வழக்கிலக்கணம்
என்பது குறிக்கப்படுகிறது. பொதுப்பெயர் பொதுவினைகள், மேல்வரும் பெயர்வினைகள்
சிறப்புப்பெயர் சிறப்பு வினையாக்குமாறும் காட்டப்படுகிறது.

வேற்றுமை முதலிய பொருண்மைக்கண் இரண்டும் பலவுமாகிய சொற்கள் ஒட்டி
ஒருசொல் நீர்மையவாதலே தொகையிலக்கணம் என்பது சேனாவரையர் உரையை ஒட்டி
விளக்கப்பட்டுள்ளது. ஐந்தொகை மொழிமேல் பிற வரும் அன்மொழி தவிர, ஏனைய
வேற்றுமை - வினை- பண்பு - உவமை - உம்மை - என்ற தொகைகள் தொல்காப்பிய
நூற்பாக்கள் உரைகள் கொண்டே விளக்கப்பட்டுள்ளன. பின், தொகையிடத்துப் பொருள்
சிறக்கும் இடம் விளக்கப்படுகிறது. தொகைகள் இரண்டுமுதல் ஏழுஅளவுவரை
விரிப்பதற்கு வாய்ப்பு உடையனவாகும் என்பது விளக்கப்படுகிறது.

பின், தொகாநிலைகள் நன்னூலை ஒட்டி விளக்கப்படுகின்றன. அடுத்து, அடுக்குத்
தொடர் அடுக்கும்முறை தெரிவிக்கப்படுகின்றது.

வாரா மரபின வரக்கூறுதல் முதலிய மரபு வழுக்கள் காக்கப்படுகின்றன.

பத்துவகை எச்சங்களும் தொல்காப்பியத்தையும் சேனாவரையர் முதலாயினார்
உரையையும் பின்பற்றி வரையப்பட்டுள்ளன. உம்மை எச்சம் தன்வேறுபாடு
இரண்டன்கண்ணும் ஒரே வினையைக்கொண்டு முடிதல் குறிப்பிடப்படுகிறது.