பக்கம் எண் :

நூலமைப்பு13

செய்யாய் என்னும் முன்னிலைச்சொல் ‘செய்யாதே, என்ற எதிர்மறைப் பொருளும்
தருமாறு அமைந்த தொல்காப்பியநூற்பாவும் அதன் நச்சினார்க்கினியர் உரையும் இடம்
பெற்றுள்ளன. உம்மைத்தொடர்முன் செஞ்சொல் வரின் நிகழ்காலம் இறந்தகாலம்
இவற்றொடு எதிர்காலம் மயங்கு மாறும் குறிப்பிடப்படுகிறது.

முன்னத்தின் உணரும் கிளவிகளும், ஒரு பொருள்மேல் பிரிவிலவாய் இருசொல்
வருவனவாய் அமைந்தனவும், ஒருபொருட்பன்மொழிகளும், செயப்படுபொருள் எழுவாய்
போலக் கிளக்கப்பட்டு அமையும் சொற்றொடர்களும், முன்னிலை ஏவல்
வினைச்சொற்களுள் ஈகாரமும் ஏகாரமும் பெற்றுவரும் சொற்களும் அடுத்துக்
குறிப்பிடப்பட்டுள்ளன. இடைச்சொற்கள் யாவும் அடைமொழிகளே என்பதும்,
உரிச்சொற்களுள் அடைமொழிகளும் உள, அடைகொளிகளும் உள என்பதும் பின்
இடம் பெற்றுள்ளன.

நன்னூலையொட்டி, யாற்றுநீர்ப்பொருள்கோள் முதலிய எண்வகைப்
பொருள்கோள்களுள் ஏழு முறையே நூற்பாவானும் உரையானும் விளக்கப்பட்டுள்ளன.
அடிமறிமாற்று மாத்திரம் தொல்காப்பியத்தை ஒட்டியுள்ளது.

இறுதியில், இலக்கண வரம்பைக் கடந்தனவாகிய ‘பெயர்நிலைக் கிளவியின் ஆகுந’
முதலியன தொல்காப்பிய நூற்பாவானும் உரைகளானும் விளக்கப்பட்டுள்ளன.

தொல்காப்பியச் செய்திகள் சில விடுக்கப்பட்டன; நன்னூற் செய்திகள் பல
கொள்ளப்பட்டன; புதியனவாகச் சில சேர்க்கப்பட்டன. இவற்றிற்குக் காரணம் பழையன
கழிதலும் புதியன புணர்த்தலும் என்பது விளக்கப்பட்டுள்ளது. கூறியனகொண்டு
கூறாதனவும் உணர்க என்று பேசும் அதிகாரப் புறனடையோடு பொதுவியல் முடிகிறது.