பக்கம் எண் :

14 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

இச்சொற்படலத்தில் சேனாவரையர் உரை பெரும்பான்மையும் நச்சினார்க்கினியர்
உரை சிறுபான்மையும் கொள்ளப்பட்டுள்ளன. நூற்பாவான் விளக்கமுடியாத இடங்களில்
தொல்காப்பியச் செய்திகள் பலவும் உரையால் விளக்கப்பட்டுள்ளன. தொல்காப்பியச்
சொற்படலம் முழுதும் பெரும்பான்மையும் உரையிலும் சிறுபான்மை நூற்பாவிலுமாகக்
காணப்படுகிறது.

ஆசிரியர்நச்சினார்க்கினியர்தம் உரைப்பகுதிகளை அவர் காட்டிய
எடுத்துக்காட்டுக்களுடன் பலவிடத்தும் சுட்டும் இவ்வாசிரியர், அவர்பால் தமது மிக்க
ஈடுபாடும் மதிப்புடைமையும் தோன்ற அவரது பெயரைச் சுட்டாமல் செல்வதை
யாண்டுங் காணலாம்.

இந்நூலின் எழுத்துப்படலம் கற்றார். தொல்காப்பிய எழுத்துப் படல
நச்சினார்க்கினியர் உரையைப் பெரும்பான்மையும் கற்றாராவர். அங்ஙனமே இதன்
சொற்படலம் கற்றார் ஒருவாற்றான் நச்சினார்க்கினியத்தோடு சேனாவரையமே
கற்றாராதல் தேற்றம்.